காதல் – அதுவே இந்த பதிவின் மையக்கரு. காதலனுடன் இளம்பெண் ஓட்டம், காதல் ஜோடி போலீசில் சரண், இளம்பெண் தற்கொலை, இது மாதிரி ஒரு டஜன் செய்திகளாவது தினமும் எல்லா நாளேடுகளிலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு புறம் திரைப்படங்களில், ஊடகங்களில், இளைஞர்கள் வட்டாரத்தில் காதலை கொண்டாடிக்கொண்டு இருக்கையில், பெரும்பாலான குடும்பங்கள் காதலை காதலிப்பதில்லை, அது இன்னமும் ஒரு கெட்ட வார்த்தை! இந்த முரண்பாட்டில் சிக்கித்தவிக்கிறது இளைய சமுதாயம்.
விடலைப்பருவம் எனும் ‘டீனேஜ்’ வரை ஆண்களும் பெண்களும் இருக்கும் வட்டம் மிகவும் சிறியது. அது விரிவடைந்து அவர்கள் இந்த உலகை நோக்கும்போது பல்வேறு பரிமாணங்களில் அது அவர்களுக்கு தோன்றும். எங்கேயும் காதல், எதிலும் ஆண்-பெண் ஈர்ப்பு, திரைப்படம், கவிதை, பாடல்கள் என எல்லாவற்றிலும் காதல் ஆராதனைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள். இவற்றை ஆராயும்போது, இளம்பருவமும் அதற்கே உரித்தான கனவுகள், கற்பனைகளும் சேர்ந்துகொள்ள, காதல் சிந்தனை மிக எளிதாக நுழைந்துவிடும்.
சிலர் கண்ணியமான காதலால் பெற்றோர் சம்மதத்துடன் வெல்கிறார்கள், இன்னும் சிலர் பெற்றோரை காயப்படுத்திவிட்டு சென்று பிறகு வாழ்க்கையில் வெல்கிறார்கள், சில காலம் கழிந்து பெற்றோருடன் இணைந்தும் விடுகிறார்கள், அந்த காயங்கள் ஆறிவிடுகின்றன. ஆனால் பலர் பெற்றோரை உதறிவிட்டு பிடித்த துணையுடன் சென்றுவிட்டு தவியாய்த் தவிக்கிறார்கள், அவர்களின் சந்தோஷமும் மடிந்து, பெற்றோர்களின் ரணங்களும் ஆறாத தழும்புகளாகின்றன. அவமானம், பிரிவு, ஏமாற்றம், வலி இவையாவும் அவர்களுக்கு இலவச இணைப்புகள்!
காலம் மாறிவிட்டது, மனிதர்களும் மாறத்தான் செய்வார்கள், குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாக இருக்கவே முடியாது. ‘டேட்டிங்’, ‘வேலன்டைன்ஸ் டே’ என பல மேற்கத்திய சமாச்சாரங்கள் நமது கலாச்சாரங்களோடு கலந்துவிட்ட பிறகு நம் பிள்ளைகளை மட்டும் குறைசொல்லி பலனில்லை. என்ன தான் செய்வது? ஏற்கனவே “தீஞ்சு போன தோசை”யில் சொன்னபடி மனம் விட்டு பேசவேண்டும். கணவன்-மனைவி சண்டைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்-பிள்ளைகள் பிரச்சனைகளுக்கும் அதுவே தீர்வு. நம் பிள்ளைகளும் ஒரு நாள் கணவனாக/மனைவியாக மாறுவது நிதர்சனம். மகன் தோள்மேல் கை போட்டு பேசுங்கள், மகளை தோழியாய் நினைத்து மனம்விட்டு பேசுங்கள், அவர்களுக்கும் மனம்விட்டு பேசும்படியான சிநேகிதமான சூழ்நிலையை அமைத்துக்கொடுக்க மறவாதீர்கள். மின்சார கம்பிகள் மீது தான் மைனாக்கள் அமரும் என புரிந்துகொள்ளுங்கள்.
இளைஞர்களும்/இளைஞிகளும் சில விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். நான்கு முறை சைட், இரண்டு எஸ்.எம்.எஸ், நடுராத்திரி பேச்சுக்கள், ஒரு ஐஸ்கிரீம், பிறகு ‘ஐ லவ் யூ’ இந்த ரீதியான வாலிபர்கள் இருக்கிறார்கள். இதை ஒப்புக்கொள்ளும் இளைஞிகளும் இருக்கிறார்கள். காதலன்/காதலி ரோலுக்கும் கணவன்/மனைவி ரோலுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. “Anyone can become a father, but not a dad”, இது எனக்கு பிடித்த ஒரு வசனம். அது போலத்தான் ஒரு நல்ல காதலன் நல்ல கணவனாய் இருப்பான் என உறுதியில்லை, ஆனால் ஒரு நல்ல கணவன் நிச்சயம் ஒரு நல்ல காதலனாய் இருப்பான் (தன் மனைவிக்கு மட்டும்)!
இளமையில் வரும் சலனங்கள், ஜிலுஜிலு உணர்வுகள் எல்லாம் காதல் இல்லை. காதல் காற்றில் பறக்கும் இறகைப் போல மென்மையான உணர்வு. அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையோடு, எல்லையில்லா அன்பு, அப்பழுக்கற்ற தியாகம், அச்சுப்பிசராத பொறுப்புணர்ச்சி என்கிற மூன்று கனமான விஷயங்களும் தேவை. இவற்றை சுமக்க உங்கள் இருவர் உள்ளங்களில் உறுதி வேண்டும். அந்த உறுதி இருந்தால் ஓடிப்போகத் தோன்றாது. கண்ணியமாக போராடி சாதிக்கத்தான் தோன்றும்!
பி.கு: நான் காதலுக்கு எதிரியும் இல்லை, சப்போர்ட் செய்பவனும் இல்லை, மிகச் சாதாரணமான யதார்த்தவாதி. அந்த யதார்த்தத்தை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். மீண்டும் சந்திப்போம்!

"மின்சார கம்பிகள் மீது தான் மைனாக்கள் அமரும் என புரிந்துகொள்ளுங்கள்".
ReplyDeleteமின்சார கம்பியில் பாயும் மின்சாரம் பற்றி காப்பாளர்க்குத்தான் தெரியும்
மைனாக்களுக்கு அல்ல.
தங்கள் பெயரை சொன்னால் ஒரு பரிசு தர வசதியாக இருக்கும்! :)
Delete