அனைவருக்கும் அஸ்வினின் அன்பு வணக்கங்கள். சமூகத்தை பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து குறைசொல்லி அழகாக அடுத்தவர்கள் மீது பழிபோட்டாயிற்று. அதில்தான் நாம் கில்லாடிகள் ஆயிற்றே. இந்தியா இந்தியா என வாயால் “பேட்ரியாடிஸம் (Patriotism)” பேசினால்கூட அனேக மக்கள் (நான் உட்பட) இந்தியாவுக்காக உழைக்கவில்லை. முதலில் வயிற்றுக்கு சோறு, பிறகு தான் நாடு. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சமூகம் என்பது மக்களின் சங்கமம் தானே. நமக்குள்ளே நாம் என்னென்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என கொஞ்சம் யோசித்துப் பார்த்து இங்கே பகிர்ந்துள்ளேன். முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிப்போம்.
அழகான இல்லம் என்பது கணவன்-மனைவியை இருசக்கரமாக கொண்ட வாகனம். அது சரியாக ஓடுவதற்கு அன்பு, காதல், நேசம், புரிந்துணர்வு என பல்வேறு எரிபொருட்கள் வேண்டும். ஒரு குட்டிக்கதை மூலம் பார்க்கலாம். ஒரு தம்பதியினர், இரு குழந்தைகள். கணவன் ஒரு பெரிய கம்பெனி மேனேஜர், மனைவி இல்லத்தரசி. வழக்கம்போல் அலுவலகத்தில் கணவனுக்கு ஆயிரம் டென்ஷன், இல்லத்தில் இல்லாளுக்கு பல்லாயிரம் டென்ஷன். ஒருநாள்கூட சண்டை வராது கழிந்ததில்லை. இருப்பினும் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் லேட்டாக எழுந்து ‘ஷேவிங் கிரீமை’ வைத்து பல்துலக்கிவிட்டு மனைவியிடம் கோபிப்பான். பாத்ரூமில் இருக்கும் பையனை கண்டபடி திட்டி வெளியே வரச்செய்து இவன் உள்ளே நுழைவான், பாத்ரூமிலிருந்து ‘டவல எங்கடி வச்சுத் தொலைச்ச’-னு சிலநேரம் குரல் வரும். எல்லாம் முடித்து சிலபல சோற்றுக் கவளங்களை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகம் விரைவான். என்றுமே லேட்டாக வரும் முதலாளி அன்று சீக்கிரமாகவே வந்து இவனுக்கென காத்திருப்பார். “அந்த பைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு என் ரூம்-க்கு வாங்க” என்று சொல்லிவிட்டு அவர் நகர, அலமாரி சாவியை தேடி இவன் கைகள் பாக்கெட்டில் நுழைய, அப்போதுதான் ஞாபகம் வரும் சாவி சமர்த்தாக வீட்டிலேயே தூங்குகிறதென்று. எப்படி இருக்கும் அவனது மனநிலை?
இது ஒரு ‘சாம்பிள்’ தான். மறுபடியும் சண்டைகள் முளைக்கும். ஒருநாள் விவாதம் முற்றுகையில் இருவரும் ஒரு முடிவெடுத்தனர். ஒரு நாள் மனைவி அலுவலகத்தையும் கணவன் இல்லத்தையும் கவனிப்பதென்று. (எந்த அலுவலகத்தில் இது சாத்தியம் என்று கேட்கவேண்டாம், இது கதை, எல்லாம் சாத்தியமே). அந்த நாளும் வந்தது. மனைவி காலையில் நேரத்தோடு எழுந்து வீட்டுவேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள். வருகைப்பதிவேட்டை எடுத்து தாமதமாக வந்தவர்களிடம் கடிந்துகொண்டு எச்சரிக்கை கொடுத்தாள். அனைத்து கோப்புகளையும் அகரவரிசைப்படி அடுக்கிவிட்டு, பழைய குப்பைகளை கழித்துவிட்டு, செய்யவேண்டிய வேலைகளுக்கு அட்டவனை தயாரித்து அவரவர்களுக்கு விநியோகித்து மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவித்தாள். அனைவரின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டு, அன்றைய நிகழ்வுகள், வேலைகள் அனைத்தையும் அறிக்கையாக தாயாரித்து முதலாளியிடம் சமர்ப்பித்துவிட்டு இல்லம் திரும்பினாள்.
இங்கே கணவன் வீட்டையே களேபரம் செய்துவிட்டான். வாசலிலேயே பிரம்பும் கையுமாக குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான். மனைவி வந்ததும் அவளிடம் பாய்ந்தான், “புள்ளைங்களாடி பெத்து வச்சிருக்க? ஒண்ணுகூட சோறு திங்க மாட்டேங்குது. அடிச்சு ரூம்ல போட்டு பூட்டி வச்சிருக்கேன்.” அவள் பதறிப்போய் வேகமாக சென்று அறையை திறந்தாள். “அய்யோ! இந்த பையன ஏங்க பூட்டி வச்சீங்க? இவன் பக்கத்துவீட்டு பையன்...”, அவள் கோபமும் கவலையும் கலந்து சொன்னாள். “ஓஹோ! அதான் தப்பிச்சு ஒடப்பாத்தானா...?” என்றான் கணவன். இதை விட கொடுமை வேறென்னவாக இருக்கமுடியும். இவ்வாறான தன்னிலை அறியாத தானியங்கி வாழ்க்கையில் தான் நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மகளிர் மாபெரும் சக்தி; அடுப்பும் எரிக்கலாம், அண்டத்தையும் எரிக்கலாம். அதை அவர்கள் முதலில் உணரவேண்டும், ஆண் வர்க்கத்தினரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மக்கள் பலதரப்பட்ட வழிகளில் பயணிக்கின்றனர். மாயமந்திரம், மந்திரித்த தாயத்து, சிறப்பு பூஜைகள், டுபாக்கூர் சாமியார்களுக்கு ஆயிரமாயிரமாய் காணிக்கைகள், இன்னும்பல. எனக்கு இவர்களை கண்டாலே ஆத்திரம்தான் வருகிறது. கமல்ஹாசன் சொல்வதுபோல, “கடவுள் இருக்கிறார் என்பவனை நம்பலாம், கடவுள் இல்லை என்பவனையும் நம்பலாம், நான் தான் கடவுள் என்பவனை மட்டும் நம்பவே கூடாது, பூட்டகேஸ் ஆகிவிடுவோம்”. மிகவும் ஆழமான வசனம். அவ்வாறு சொல்லிக்கொள்ளும் சாமியார்களிடம் தான் மக்கள் விழுகின்றனர். அந்த சாக்கடையில் மூழ்கி குடும்பத்தை கவனிக்காமல் அவர்களின் நேசத்தை முற்றிலுமாக இழந்த ஒருவரை எனக்கு நன்றாக தெரியும்.
இதற்கான தீர்வுதான் என்ன? மனம் விட்டு பேசுதல் மட்டுமே. “ஷேரிங்” மிகவும் முக்கியம். உணவினை மட்டும் பகிர்ந்துகொள்ளாமல் உணர்வினையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். கணவன் என்பவன் காசை சம்பாதித்துக் கொட்டும் இயந்திரமாக இல்லாமல் இல்லத்தையும் அதை சரியான பாதையில் நடத்தும் இல்லாளையும் புரிந்துகொள்ள வேண்டும். மனைவி என்பவள் உடலுக்கு மகிழ்ச்சியும், வயிற்றுக்கு உணவும் அளிப்பதோடு மட்டும் இல்லாமல், உள்ளத்திற்கு அன்பினையும் நேசத்தையும் வழங்கிட வேண்டும். காதலுக்காக பெற்றோரை மறந்துவிடலாம், காதலிக்கும்போது உங்களையே மறந்துவிடலாம், ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு காதலை மறந்துவிடக்கூடாது (எனது அடுத்த பதிவு காதலைப்பற்றி தான்).
எல்லாம் சரிப்பா, தீஞ்சு போன தோசை என்னாச்சுன்னு கேக்கறீங்களா? இதோ வரேன். புரிந்துகொள்ளுதல் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள ஒரு உதாரணம். மேற்சொன்ன கதையில் உள்ள கணவன்-மனைவி பேசி புரிந்துகொண்டு சமரசம் ஆகிவிட்டார்கள். வண்டி நன்றாக ஓடுகிறது. ஒரு நாள் இரவு அனைவரும் அமர்ந்து தோசை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். கணவருக்கு வைத்த தோசை மிகவும் தீய்ந்துபோய் இருந்தது, இருப்பினும் அவன், “தோசை முறுகலா சூப்பரா இருக்கே, தேங்க்ஸ்டி செல்லம்” என்று சொல்லிவிட்டு சாப்பிட்டான். அடுத்த தோசைக்கு மனைவி சமையலறைக்குள் சென்றபிறகு மகன் கேட்டான், “ஏம்பா தோசை தீஞ்சு போயிருக்கு, சூப்பர்னு சொல்ற?”. அவனளித்த பதில் இதோ: “உங்கம்மாவுக்கு வீட்ல நிறைய டென்ஷன்டா, தெரியாம தீய விட்டுருப்பா, என் பொண்டாட்டிய குறைசொல்லாம சாப்பிடு!”. அடுத்த தோசை உண்மையிலேயே சூப்பர் முறுகலாக வந்தது. மனைவியின் நிலையறிந்து பேசிய கணவன், அம்மா உள்ளே சென்ற பிறகு தீய்ந்ததைப் பற்றி கேட்ட மகன், ஆசைக்கணவனுக்காக அடுத்த தோசையை உண்மையாகவே முறுகலாக்கிய மனைவி என எல்லோரிடமும் புரிந்துணர்வு குடிகொண்டு உள்ளது. எல்லோரும் இதை பின்பற்றினால் நமது இல்லங்களும் சொர்க்கமாகும் நாள் மிக அருகில்தான்.
பி.கு: என்ன தலைப்பு வைப்பதென்று குழம்பிக்கொண்டு இருந்தேன், தீஞ்சு போன தோசைக்கு நன்றி. எனக்கு பசிக்குது, இப்போ தீயாத தோசை சாப்பிட நான் கிளம்புகிறேன், மீண்டும் சந்திப்போம்.


Comments
Post a Comment