அனைவருக்கும் அஸ்வினின் அன்பு வணக்கம்!
என்னடா இவன் எப்ப பாத்தாலும் தோசையை பற்றி எழுதுறான்னு நீங்க நினைக்கலாம், தப்பில்லை. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான பதிவு. இது ஒரு குட்டிக்கதை. உண்மையா பொய்யா தெரியாது, ஆனாலும் மிக அழகான கதை!
ஒரு சமயம் ஒரு பெரிய மனிதர் ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் வேண்டுதலின் பேரில் தோசைக்கு சக்கரை தருவது வாடிக்கை. ஆனால் ஏதோ ஒரு காரணமாக அன்று முதல் தோசைக்கு சக்கரை தருவதில்லை என்று அவர் சாப்பிட்ட ஓட்டல் நிர்வாகம் முடிவெடுத்து, ஒரு அறிவிப்பு பலகையில் “இன்று முதல் தோசைக்கு சக்கரை கிடையாது” என்று அறிவித்திருந்தது. இருந்தாலும் அவர் சர்வரிடம் தான் கேட்ட தோசையுடன் சக்கரை வேண்டுமென கேட்டார். அப்போது சர்வர் சற்றே ஆணவமாக போர்டை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
உடனே அந்த பெரியவர் மேலும் ஒரு தோசை ஆர்டர் செய்தார். அந்த தோசை வரும் வரை காத்திருந்து, அந்த தோசை வந்தவுடன் அதற்கு சக்கரை கேட்டார். மறுபடியும் அதே ஆணவத்துடன் பலகையை காட்டினார் சர்வர். அதை பார்த்து “எங்கே படி” என்றார். “இது வேறயா” என்று முணுமுணுத்த சர்வர் படித்தார்.
“இன்று முதல் தோசைக்கு தானே சக்கரை கிடையாது. இது முதல் தோசையல்ல. இரண்டாவது தோசை” என்று சொன்னார். அவ்வளவு தான் வாயடைத்து போன சர்வர் சக்கரை கொடுத்து விட்டு முதல் காரியமாக பலகை வாசகத்தை “இனி மேல் தோசைக்கு சக்கரை கிடையாது” என்று மாற்றினார்.
அவ்வளவு தான்! இதற்காகவே காத்திருந்தவர்போல் சர்வரை தன்பக்கம் அழைத்து இரண்டாவது தோசைக்கும் சக்கரை கேட்டார் அந்த மனிதர். மேலும் கீழூமாக பார்த்த சர்வர் மீண்டும் பலகையை காட்ட முன் போலவே படிக்க சொன்னார். சர்வர் படித்தார். “இனி மேல் தோசைக்கு தானே சக்கரை கிடையாது, நான் கீழ் தோசைக்கு தான் சக்கரை கேட்கிறேன்!” என்று சொல்ல மீண்டும் வாயடைத்து போன சர்வர் சக்கரை கொடுத்து விட்டு பலகை வாசகத்தை “தோசைக்கு சக்கரை கிடையாது” என்று மாற்றிவிட்டு ஓடியேவிட்டார்.
அந்த மாமனிதர் வேறு யாரும் இல்லை, நமது கலைவாணர் என்.எஸ்.கே. (Kalaivaanar N. S. Krishnan) தான். அவர் குறும்புக்குப் பெயர் போனவர். அவர்போல் குறும்பு செய்தவர்கள் குறைவு என்று சொல்லமுடியாது, இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கலைவாணரின் இந்த வார்த்தை ஜால குறும்பும், அவரது சிரிக்கவைத்து சிந்திக்க வைக்கும் திறனும் தான் அவரை நம்முடன் இன்றும் அமரராக வைத்திருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்!
Comments
Post a Comment