கொஞ்சம் சின்ன ‘கேப்’க்கு பிறகு மறுபடியும் எழுத நேரம் கிடைத்தது. யாரையாச்சும் “எப்படி இருக்கீங்க?”னு கேட்டோம்னா அவங்க கிட்ட இருந்து வர்ற அனேக பதில், “ஏதோ இருக்கேன்”. பயபுள்ள வடிவேல் ரசிகர்னா, “ஏதோ வண்டி ஓடுது”னு சொல்வாங்க. இதுல என்ன இருக்குனு கேக்குறீங்களா? இதுல தான் நிறைய இருக்கு. எல்லோரும் வாழ்க்கையில் பயணிப்பது மகிழ்ச்சி என்னும் இடத்தை நோக்கித்தானே. சரி அது எங்க இருக்குனு சொல்லுங்க, ஒரு அரைக்கிலோ வாங்கி வைப்போம்னு நீங்க நினைக்கலாம். கண்டிப்பா சொல்றேன், அது எங்க இருக்குனு சொல்லத்தான் இந்த பதிவே!
வழக்கம்போல ஒரு சின்னக்கதை, வேண்டாம் வேண்டாம்! குட்டிக்கதைனு வச்சுக்கலாம். அதுதான் அழகா இருக்கும். ஒரு அழகிய கிராமம், அதில் வசிக்கும் அன்பான மக்கள், அருவி, மலை, நதி, அதே லொக்கேஷன்ஸ். அதுக்கு பக்கத்துல ஒரு காடு. ஒரு முனிவர் தவம் பண்ணிக்கிட்டு இருக்கனுமே-னு நீங்க நெனச்சா கரெக்ட் தான். அவர் இல்லாம கதை சொல்ல முடியாதே. சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு மாமுனிவர் அந்த கானகத்தில் நெடுநாட்களாக தவம் செய்துக்கொண்டு வசித்து வந்தார். அந்த கிராமத்து மக்கள் அவருக்கு தரும் காய்கனிகளை புசித்து வந்து, அவர்களுக்கு சில அறிவுரைகளையும், நல்புத்திகளையும் வழங்கிவந்தார்.
அதே கிராமத்தில் ஒரு பண்ணையார் இருந்தார், பெரும் செல்வந்தர். பல அறைகளில் வைரமும், வைடூரியமும், தங்கமும் அவரிடத்தில் குவிந்து கிடந்தன. ஆனால் நிம்மதி, சந்தோஷம் போன்ற சிலவற்றில் மட்டும் அவர் பரம ஏழை. அவரை விட வசதியில் குறைந்தவர்கள், அன்றாடம் காய்ச்சிகள் என அனைவரும் அந்த கிராமத்தில் மகிழ்ச்சியோடு வாழ்வதைப் பார்க்கையிலே நம் பண்ணையாருக்கு ரொம்ப கவலை. அதனால் அவர் அந்த முனிவரிடம் சென்று பரிகாரம் கேட்கலாம் என நினைத்தார். தம்மிடம் உள்ள செல்வத்தில் ஓர் குவியலை அள்ளி மூட்டையாக கட்டிக்கொண்டு காடு வழியே பயணிக்கலானார். இது நல்ல காடு, நல்ல கிராமம், ஸோ நோ திருடன், கொள்ளையர்கள். பண்ணையார் அந்த முனிவரின் ஆசிரமத்தை வந்தடைந்து மூட்டையை கொண்டுபோய் முனிவர் காலடியில் வைத்து வணங்கினார்.
“சுவாமி! என்னிடம் இருக்கும் செல்வங்கள் எண்ணிலடங்காதவை. எனினும் சந்தோஷமும் நிம்மதியும் என்னை தீண்டவே மாட்டேன் என அடம் பிடிக்கின்றது. தயைகூர்ந்து நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும். இந்த பொக்கிஷ மூட்டையை அடியேனுடைய காணிக்கையாக ஏற்றுக்கொள்ளுங்கள்”, பண்ணையார் மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார். முனிவர் முகத்தில் சிறிதும் சலனமில்லை. பண்ணையாரைப் பார்த்தார், மூட்டையைப் பார்த்தார், குடில் வாயிலைப் பார்த்தார். மீண்டும் ஒரு முறை பண்ணையாரைப் பார்த்தார், மூட்டையைப் பார்த்தார், குடில் வாயிலையும் பார்த்தார். ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்துவந்து அந்த மூட்டையை குனிந்து எடுத்தார். எடுத்த மூட்டையை தன் தோளில் வைத்துக்கொண்டு புள்ளிமானைப் போல ஒரு மின்னல் ஓட்டம் எடுத்தார்!
அனைவருக்கும் பயங்கர மிரட்சி. பண்ணையார் முகத்தில் ஈயாடவில்லை. “போயும் போயும் ஒரு டுபாக்கூர் சாமியிடம் பொக்கிஷ மூட்டையை கொடுத்து ஏமாந்து விட்டாயே மூளை கெட்டவனே...!” என அவரின் மனசாட்சி அவரை ஏசத் தொடங்கியது. வந்ததே அவருக்கு ஆத்திரம், புள்ளிமானை விரட்டும் புலியென பாய்ந்து புறப்பட்டார் பண்ணையார். முனிவர் எங்கிருந்துதான் அவ்வளவு சக்தியை எடுத்தாரோ, காடு, மலை, அருவி, பள்ளம் என அந்த வட்டாரத்தையே சுற்றிசுற்றி ஓடினார். பண்ணையாரும் விடுவதாக இல்லை, செம விரட்டு விரட்டினார். எல்லா இடமும் ஓடிய பிறகு மீண்டும் தன் ஆசிரமத்திற்கே வந்துவிட்டார் முனிவர். இருவரும் மூச்சுவாங்க நின்றனர். அந்த மூட்டையை கீழே போட்டுவிட்டு தன் ஆசனத்தில் சென்று சமர்த்தாக அமர்ந்துகொண்டார் முனிவர்.
கூடி நின்ற அனைவருக்கும் குழப்பம், நம் பண்ணையாருக்கோ மெகா குழப்பம். அதையும் மீறி அந்த மூட்டை திரும்பக் கிடைத்ததில் பெருத்த மகிழ்ச்சி அவருக்கு. கண்களில் நீர் சுரக்க அந்த மூட்டையை கட்டியணைத்து முத்தமிட்டார். தன் சேவகனிடம் அதை கொடுத்துவிட்டு முனிவரிடம் சென்று பவ்யமாய் நின்றார் பண்ணையார். “சுவாமி! தங்களின் இந்த வினோத செயலுக்கான காரணம் என்ன? ஏன் எனது மூட்டை அபகரிக்கப்பட்டு மீண்டும் கிடைக்கிறது? என்ன நடக்கின்றது சுவாமி?”, பல குழப்ப வினாக்களை அடுக்கினார் முனிவரிடம். ஒரு சிறு புன்னகையை உதிர்த்த முனிவர் சொன்னார்
“இந்த மூட்டையை நீ தான் கொண்டு வந்தாய். அப்போது உன் முகத்தில் மகிழ்ச்சியில்லை. நான் அதில் எதையும் சேர்க்கவுமில்லை எடுக்கவுமில்லை. ஆனால் ஒரு சிறு பிரிவுக்குப்பின் அதே மூட்டை இப்பொழுது உன்னிடம் இருக்கும்போது மகிழ்ச்சியில் திளைக்கிறாய். ஆக மகிழ்ச்சி என்பது நீ வெளியில் தேடவேண்டிய பொருள் அல்ல, உனக்குள் அறியப்பட வேண்டிய விஷயம். அதை உணர்த்தவே இந்த நாடகம். அந்த மூட்டையின் செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்!”. பண்ணையாருக்கு ஒரு தெளிவு பிறந்தது. அப்போ உங்களுக்கு?


Comments
Post a Comment