நாய்க்குட்டிகள் விற்பனைக்கு!


வணக்கம். இது நான் ஒரு புத்தகத்தில் வெகுநாட்கள் முன்பு படித்த கதை. மனதைக் கவர்ந்த கதையும் கூட. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்!


சூரியன் சுள்ளென்று முகத்தில் அடித்து கரிசல் மண்ணிற்கு வரவேற்றது. அந்த ஊர் விவசாயி ஒருவர் நாய்க்குட்டிகளையும் விற்பனை செய்துவந்தார். தன் இல்லத்திற்கு முன் “நாய்க்குட்டிகள் விற்பனைக்கு...” என்று ஒரு விளம்பர பலகையை மாட்டிக்கொண்டு இருந்தார். ‘தட்’ ‘தட்’ என்று ஒவ்வொரு ஆணியும் பலகையினுள் நுழைந்து கொண்டிருந்த வேளையில், “அண்ணே அண்ணே” ஒரு பொடியனின் குரல் அவர் முதுகிற்குப் பின்னால் ஒலித்தது.


“என்ன வேணும் தம்பி?”, விவசாயி கேட்க, “உங்ககிட்ட நாய்க்குட்டி இருக்குனு சொன்னாங்க, வாங்கிடுப்போய் வளர்க்கப்போறேன் அண்ணே!” தெளிவாய் சொன்னான் பொடியன். பிடரியை சொறிந்தபடி விவசாயி சொன்னார், “இதெல்லாம் சாதி குட்டிடா தம்பி, ரொம்ப விலை ஆகும், எவ்ளோ காசு வச்சிருக்க?”. இப்போது பொடியனின் தலை தொங்கிப்போனது. டிராயர் பைக்குள் கைவிட்டு துழவியபடி முழித்தான் அவன்.


வெளியே எடுத்த கையில் தளும்பத் தளும்ப பித்தளைக்காசுகள், ஓட்டைக் காலணா மற்றும் சில செல்லும் காசுகள். “சும்மா பாக்குறதுக்கு இது போதுமா அண்ணே?”, விவசாயியிடம் நீட்டினான் பொடியன். “சரி, வந்து பாரு”, அழகாக ஒரு விசில் அடித்தார் விவசாயி. நிலத்தின் கோடியில் இருந்த ஒரு சிறிய மரவீட்டுக்குள் இருந்து மெல்லிய பஞ்சுப்பந்துகள் போல அந்த நாய்க்குட்டிகள் உருண்டோடி வந்தன. பொடியன் கன்னத்தை வேலியில் ஒட்டியபடி வைத்துக்கொண்டு இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்கள் சந்தோஷ மிகுதியில் துள்ளிக்குதித்தன.


அந்த குட்டிகள் வேலியை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், இன்னும்கூட ஒரு சலசலப்பு அந்த மரவீட்டினுள். மீண்டும் ஒரு பஞ்சுப்பந்து! மற்றவைகளை விட கொஞ்சம் சிறியது, அதிலிருந்து வெளியேறி “தத்தக்கா பித்தக்கா” என்று நடக்கத் துவங்கியது. மற்ற குட்டிகளை நெருங்குவதற்கு இந்த குட்டி படாதபாடு பட்டது. “இந்த காசுக்கு எனக்கு அந்த குட்டிய குடுங்க அண்ணே ப்ளீஸ்!”, கெஞ்சினான் பொடியன். அவனிடம் மெல்ல குனிந்து உட்கார்ந்துகொண்டு விவசாயி சொன்னார், “அது வேண்டாம்பா தம்பி. சரியான நொண்டிக்குட்டி அது. மத்த குட்டிங்க மாதிரி உன்கூட அதால ஓடி ஆடி விளையாட முடியாது”. எந்த சமாளிப்பையும் அவன் ஏற்கவில்லை, விடாப்பிடியாக இருந்தான் பொடியன். “சரி உன் இஷ்டம். நீயே போய் எடுத்துக்கோ”, வேலியைத் திறந்து விட்டார் விவசாயி.


அந்த பொடியன் நடந்து போகும்பொழுது தான் விவசாயி கவனித்தார், அவன் அணிந்திருக்கும் காலணி மரத்தால் ஆனது, இரும்பு கம்பிகள் உதவியோடு முழங்காலில் இணைக்கப்பட்டிருந்தது. “என்னாலயும் ஓடி ஆட முடியாதுண்ணே, அந்தக் குட்டிக்கு தேவை அத புரிஞ்சுக்கற ஒரு ஆள் தான்”, கையில் அந்த குட்டியை எடுத்துக்கொண்டு விவசாயியைப் பார்த்து சொன்னான் பொடியன். இப்பொழுது அவன் பொடியனாக தோன்றவில்லை அந்த விவசாயிக்கு.

Comments

Post a Comment