ஒவ்வொரு வருடமும் காலெண்டர் மட்டும் மாற்றப்பட்டு வந்த காலம் சென்றுவிட்டது. உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. இந்த உலகில் பல சமரசங்களுக்கு உட்பட்டே நாம் வாழவேண்டியிருக்கிறது. மகத்தான அறிவையும் முன்னேற்றத்தையும் பெற்றுக்கொண்ட நாம், கண்ணுக்குத்தெரியாமல் இழப்பது ஏராளம். அவற்றில் முக்கியமான ஒன்று நேரம்...
இன்றைய காலகட்டத்தில் தாய்க்கு பிள்ளையிடம் பேச நேரமில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோரிடம் தங்கள் அன்றாட அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நேரமில்லை. உடன்பிறப்புகள் வெறும் ‘ஹலோ’ எல்லைக்குள் போய்விட்டார்கள். உறவினர்கள் விஷயமோ இன்னும் மோசம். எல்லார் வீட்டு விசேஷங்களுக்கும் செல்ல முடியவில்லை. நேருக்குநேர் பேசும்பொழுதுகூட முழுதாய் பேச விடுவதில்லை இந்த கைபேசிகள்...
இன்னொரு பக்கத்தில் எதிராளி மீது அன்பு பொழிவதாக நினைத்துக்கொண்டு சிலர் அவர்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளுகிறார்கள். பாசமும் அன்பும் சுமைகளை குறைக்கவேண்டுமே தவிர இப்படி புகுத்தக்கூடாது. நேரத்துக்கும் பாசத்துக்கும் சம்மந்தம் இல்லையென நேரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் மட்டுமே உணரமுடியும்...
“வர்றதே கிடையாது, அப்படியே வந்தாலும் உடனே ஓடிடறது, இதுக்கு ஏன் வரணும்?”
“அடேங்கப்பா இப்ப தான் வழி தெரிஞ்சுதா?”
“நாங்க எல்லாம் கூப்டா வருவீங்களா?”
இது போன்ற வசனங்களை நமது வட்டாரத்தில் கேட்காமல் இருக்கவே முடியாது. நீங்கள் அழைக்கும்போதும் எதிர்ப்பார்க்கும் போதும் உங்களுடன் நேரத்தை செலவிட இயலாதவர்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள். அவர்களின் சௌகரியமான நேரத்தில் வரும்போது பொய்க்கோபம் காட்டி அவர்களை வருத்தாமல் இருப்பது அதைவிட முக்கியம். வாசலிலேயே வைத்து அர்ச்சனைகள் செய்தால் விளக்கம் கொடுப்பதற்கே பாதி நேரம் போய்விடும்.
அதிகமாக இறுக்கி அணைத்தால் குழந்தைகள், ஏன் செல்லப்பிராணிகள் கூட விரும்புவதில்லை. விடுபட்டுக் கொண்டு ஓடிவிடும். பிறர் நிலைமையை புரிந்துகொள்வதும், அதற்கேற்ப சில ஏமாற்றங்களை சகித்துக்கொள்வதும் தான் அன்பின் உண்மையான தன்மை. இந்த பரிணாம வளர்ச்சியடைந்த உலகில் அனைவரும் உணரவேண்டிய பரிமாணங்கள்!

//அதிகமாக இறுக்கி அணைத்தால் குழந்தைகள், ஏன் செல்லப்பிராணிகள் கூட விரும்புவதில்லை. விடுபட்டுக் கொண்டு ஓடிவிடும். //ரொம்ப சரி..
ReplyDelete