“எலே! சாங்காலம் 7 மணி ஆயிடுச்சுடா... பொட்டிய பாக்க போவோம் வா...”
ஏதோ அதிசயப் பெட்டியைப் பற்றி சொல்லப்போகிறேன் என நினைக்கவேண்டாம். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, தொலைக்காட்சி என்ற ஒன்று வந்த புதிதில் கிராமங்களில் கேட்கப்பட்ட சாதரணமான வசனம் தான் இது. ஆங்கிலத்தில் தொலைக்காட்சியை “இடியட் பாக்ஸ்” (Idiot Box) என்று சொல்வதுண்டு. அவ்வாறு சொல்வதில் தவறே இல்லையென இப்போது வரும் ‘ரியாலிட்டி ஷோ’ (Reality Show) என்ற கொடுமைகள் நிரூபிக்கின்றன. நான் எந்தெந்த நிகழ்ச்சிகளை குறிப்பிடுகிறேன் என அனைவருக்கும் எளிமையாக புரியும். நான் சொல்கிற அனைத்தும் முரணாகப் படும் பலருக்கு. தொலைநோக்குப் பார்வையில் இவையாவும் உண்மையே. இந்த பதிவில் அதனைப்பற்றி அலசுவோம்.
இசை என்பது இறைவனின் வடிவம். முறையாக பயின்று, அரங்கேற்றம் செய்வபர்கள் இக்காலத்தில் மிக சொற்பமே. குறுக்கு வழிதான் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றாயிற்றே. ஒரு 50 லகரம் மதிப்பிலான வீட்டை வைத்து ஆசை காட்டி பல பிஞ்சுகளின் கல்வி வாழ்க்கையை மிகப்பெரும் கேள்விக்குறியாக மாற்றி வருகின்றது நட்சத்திர குழுவிலுள்ள ஒரு தமிழ் சேனல். “இவன் பெரிய மாமேதை மாதிரி குறைசொல்ல வந்துட்டான், அது எவ்வளவு சிறப்பான நிகழ்ச்சி” என பலருக்கு தோன்றலாம். அவ்வாறு தோன்றுபவர்கள் இந்த பதிவை இதற்குமேல் நிச்சயம் தொடரவேண்டும். மழலைகள் போட்டி போடலாம், ஆனால் அதற்கான பரிசு பிரம்மாண்டம் என்பதால், அவர்களின் மேல் திணிக்கப்படும் எதிர்பார்ப்பும் பளுவும் மிகப்பிரம்மாண்டமான ஒன்றாகின்றன. போட்டியில் ஒருவர்தான் வெல்ல முடியும், அதுவே முறையும்கூட. ஏமாற்றத்தை தாங்கும் வித்தைகளுக்குரிய விதைகள் அந்த பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்படவில்லை, அது அவர்களை மேலும் ரணப்படுத்தும், இவர்கள் அழுவதையும் காசாக்க பலமுறை ஒளிபரப்புவார்கள், பார்க்கும் ஒவ்வொருவரின் அனுதாபங்கள் சோகத்தை மிகைப்படுத்துமே தவிர குறைக்காது!
ஓட்டு போடுவது என்பது எல்லா இடங்களிலும் வந்துவிட்டது, சில இடங்களில் காசு வாங்கி, இவர்களிடம் காசு கொடுத்து. குறைந்தபட்சம் 5 ரூபாய் என நினைக்கிறேன், அதில் நிறுவனத்திற்கான செலவு சில பைசாக்கள் மட்டுமே. ஒவ்வொரு குழந்தையும் இந்த படப்பிடிப்புக்காக பல மாதங்கள் பள்ளிப்படிப்பை தியாகம் செய்கின்றது. சிலபேர் வெளியூர்களிலிருந்து, இன்னும் சிலர் வெளிநாடுகளிலிருந்து வந்து காலத்தை காசாக்க நினைத்து காசையும் காலத்தையும் கரைக்கின்றனர். அடுத்த வருடம் அதே பள்ளியில் அப்பிள்ளைகள் பயிலும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். தன்னுடன் படித்தவர்கள் உயர்ந்த வகுப்பில் இருப்பார்கள், சில காலம் கழித்து இவர்களுக்கு முன்பாகவே வேலைக்கு செல்வார்கள், சம்பாதிப்பார்கள். திறமையை கண்டறிந்து ஊக்குவிப்பது மிகச்சிறந்த பணி தான். ஆனால் அதற்கான வழிவகைகளை தவறாக பயன்படுத்தி லாபம் ஈட்டுவதே இவர்களின் நோக்கமாகும்...
நிகழ்ச்சியாவது காணும்படி இருக்கிறதா? சத்தியமாக இல்லை. சாக்லேட் பாய், ஸ்வீட் கேர்ள், ப்ளேபாய், என்று கன்னாபின்னாவென்று கண்றாவியாய் பட்டைப்பெயர்கள். இரட்டை அர்த்த வசன பாடல்களை பாடுவதும், செம்பட்டை தலையுடன் திரிவதும், இது தான் சாக்கு என்று இவர்களிடமிருந்து முத்தம் கேட்கும் பெரிசுகளும், அய்யையோ ! கலாச்சாரத்தை கல்லால் அடித்து சாகடிப்பதென இவர்கள் முடிவுகட்டி விட்டார்கள். ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் ‘ஊளை’ இடுவதில் என்னதான் பேஷனோ? இதற்கு சம்பளம் கொடுத்து ஒரு ஆளை வேறு நியமித்திருக்கிறார்கள். நீதிபதிகள் மிகப்பெரும் திறமைசாலிகள், சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு அனைவரையும் எதிர்பார்ப்பது மிகவும் தவறு. ஸ்ருதி லைட்டா விலகிவிட்டது, லயம் லேசா நெளிந்துவிட்டது, ஸ்வரம் கொஞ்சம் வழுக்கிவிட்டது என்று ஏதேதோ சொல்லி பிஞ்சுகளையும் நம்மையும் தலையை பிய்த்துக்கொள்ள வைக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரு வழியாக கடந்து இறுதிக்கு வந்தால், இறுதிப்போட்டியில் பொறுமை மிகவும் சோதிக்கப்பட்டு, முடிவுகள் ‘வரும், ஆனா வராது’ என்ற பாணியில் நள்ளிரவில் பெட்ரோல் விலையேற்றம் போல அறிவிக்கிறார்கள். ‘ஷேர் ஆட்டோ’ ஓட்டுனர்கள் மட்டும் இவர்களை கோவில் கட்டி கும்பிடுவார்கள் (நேரில் சென்று பார்ப்பவர்கள் நன்றாகவே அறிவர்). நோக்கம் நல்லதாக இருப்பினும்கூட, வழிமுறைகள் சரியல்ல. ஒருவரின் லாபத்திற்காக பலரை பலவிதத்தில் நஷ்டப்படுத்துவது முறையல்ல...
இசையின் இணைபிரியா விஷயம் நடனம். பல சேனல்களில் பலப்பல நிகழ்ச்சிகள் நடனத்தை மையப்படுத்தி நடத்தப்படுகின்றன. இங்கும் திறமைகள் கண்டறியும் நோக்கம் முழுதாய் செயல்படாமல் வெறும் சம்பிரதாயமாகவே உள்ளது. ஒன்று மக்கள் அல்லது சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெற வேண்டும். அதற்குப்பதிலாக தனது நடனப்பள்ளி கூட்டத்தையே களமிறக்கி நிகழ்ச்சியை இயக்குபவர்களே அதனை தரம்தாழ்த்தி விடுகிறார்கள். கிழி கிழி கிழி என எதையாவது கிழிப்பதும், மச்சான்ஸ்க்கு கிஸ் அடிப்பதும் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் முக்கிய வேலைகளாக மாறிவிட்டது...
இன்னொரு நிகழ்ச்சி. இறுதி எழுத்து சேனலுக்கு அவற்றைப் பார்க்கும் மக்கள் மேல் என்ன கோபமோ. ஒரு பிரச்சனையை பஞ்சாயத்து செய்ய நீதிமன்றங்களால், காவல் நிலையங்களால் இயலவில்லை. இவர்கள் செய்துவிடுவார்களாம். சம்மந்தப்பட்ட இரு தரப்பினை இரு முனையில் அமரவைத்து, அவர்களின் துன்பங்களை அவர்கள் வாயால் சொல்ல வைத்து அவர்கள் அழுது, தேம்பி, வெதும்பி, இவர்கள் மீண்டும் கிளறிவிட்டு, கொடுமையிலும் கொடுமை. வாய்க்கால் தகராறு முதல் வம்சாவளி தகராறு வரை ‘டீல்’ செய்கிறார்கள். இதுவரையில் கட்டிப்பிரண்டு சண்டையிடவில்லை என நினைக்கிறேன். இவர்கள் அனைவரையும் வரிசையில் நிற்கவைத்து கன்னங்களை பழுக்கச்செய்ய வேண்டும். அவ்வளவு ஆத்திரம் வருகிறது!
ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும் தனித்தனி பதிவுகளில் கிழிக்கலாம். ஆனால் நேரமும் இல்லை, மனமும் இல்லை. இதனைப் பார்த்து எவரும் திருந்தப்போவதில்லை. அந்த நேரத்தை அடுத்த பதிவுக்காக உருப்படியாக பயன்படுத்திக்கொள்வேன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எதுவுமே அசல் கிடையாது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் நடந்துவரும் நிகழ்ச்சிகளின் அப்பட்டமான நகல்களே. உருப்படியான நிகழ்ச்சிகளை எவரும் ‘ஸ்பான்சர்’ செய்வது இல்லை. அப்படியே செய்தாலும் அவை பெரும்பாலும் மதிய வேளைகளில்தான் வரும். என்னைப்பொறுத்தவரையில் இந்த ‘ரியாலிட்டி ஷோக்கள்’ அபத்தங்களின் தொகுப்பே. எழுத்துக்கள் மீண்டும் ஜனிக்கும்...
பி.கு: தமிழ் சினிமாக்களில் பெரும்பாலும் அவற்றின் தலைப்பு அடங்கிய வசனம் அல்லது காரணம் படம் முடிவதற்குள் வந்துவிடும். இந்த பதிவின் தலைப்பின் காரணமும் இப்பொழுது புரிந்திருக்கும்!

Aasai makkal ku ullavarai intha program nadaka tan seiyum enna
ReplyDelete