அடித்துப்போட்ட மாதிரி கிட்டத்தட்ட 6 மணிநேர சுகமான தூக்கம். ஹன்சிகா, காஜல்-னு குஷியா இருந்திருக்கும்னு நினைத்துவிட வேண்டாம். முக்கால்வாசி எனக்கு கல்விக்கடன் கொடுத்த வங்கி மேலாளர் தான் வருவார், மீதியுள்ள கால்வாசியில் எகிறிக்கொண்டு போகும் விலைவாசியும், எங்கேயோ இருந்து வரும் என தாய் தந்தையின் ஆசியும் வரும். கஷ்டப்பட்டு எழுந்து பல்விளக்க நினைக்கும்போதே கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகிவிடும். விறுவிறுவென குளித்துவிட்டு, பரபரவென காலை சிற்றுண்டியை உள்ளே திணித்துவிட்டு, அரக்கப்பரக்க மின்சார ரயிலைப் பிடிக்க ஓடுவேன்.
அங்கே இருக்கும் கூட்டத்தைப் பற்றி நான் விளக்கத் தேவையில்லை. இது போதாதென்று MGR பாடல்களை சீன கைப்பேசியில் அலறவிடும் ஒரு ‘கேரக்டர்’, முந்தியநாள் இரவு அருந்திய அரசு சோமபானத்தை எப்பொழுது வேண்டுமானாலும் நம்மீது வாந்தியெடுக்கும் நிலையில் ஒரு ‘கேரக்டர்’, ரேகைகள் அழியும் அளவிற்கு கையை தட்டித்தட்டி காசுபார்க்கும் அலிகள் ‘கேரக்டர்’ (அவர்கள் திருநங்கை என்ற சொல்லுக்கு பொருத்தமற்றவர்கள்), என பலபேர்களை சமாளிக்கவேண்டியிருக்கும். ஒருவழியாக அந்த நகரும் நரகம் 1 மணிநேரத்திற்கு பிறகு TIDEL PARK வந்து நிற்கும்.
நின்றதுதான் தாமதம்! கட்டிக்கரும்பு இரும்பில் மாட்டி வெளிவருவது போல இறங்கி, ஜியாமெட்ரி டப்பாவிலிருந்து கோலிகுண்டுகள் உருண்டோடுவது போல எல்லோருடனும் சேர்ந்து அலுவலகம் நோக்கி விரைவேன். வாய்கிழிய வலைப்பூவில் தேசியம் பேசினால்கூட வேலை செய்வதென்னவோ வெள்ளைக்காரனுக்குதான். நன்றாக வளர்ந்தவுடன் சொந்தம் கொண்டாடும் இந்தியனுக்கு, திறமையை வளர்க்கின்ற வெள்ளையனே மேல். சாஸ்வதமான ஆசனத்தில் அமர்ந்தவுடன் வெளிஉலகுக்கு குட்பை சொல்லிடுவேன். நேற்று விட்டுச்சென்ற மின்கோப்புகளை நோண்டிவிட்டு நிமிர்ந்தால் மதியம் வந்துவிடும். வயிறு கடமுடா என ‘அலாரம்’ அடிக்கும்முன் எழுந்து உணவகம் செல்ல எத்தனிக்கும் வேளையில் மிகச்சரியாக ஒரு முக்கிய வேலை தினமும் எப்படியாவது என் விலாசத்தை அறிந்து வந்துவிடும். அதையும் சிரத்தையுடன் முடித்துவிட்டு உணவகம் வந்தால், ‘மெனு கார்டு’ என்னை முறைத்துப்பார்க்கும்; நான் போகும் வேளையில் மீதியிருக்கும் சப்பாத்தியை தவிர வேறு ஏதாவது நான் சொல்வேனா என்று...
மதியம் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், அது என் வேலையில் வராதவாறு பார்த்துக்கொண்டு மீதமுள்ள பணிகளையும் முடிப்பேன். 7 மணி ஆனவுடன் ராக்கெட் ஏவப்போகும் விஞ்ஞானிகளை விட அதிகம் மணி பார்க்க ஆரம்பித்து, 8 அல்லது 9 மணிக்கு அலுவலகத்திநின்றும் வெளியே வந்து இல்லம் திரும்புவேன். ஒரு ஆங்கில படம் பார்த்தால்தான் தூக்கம் வரும் (அப்படி ஒரு பிரமை எனக்கு). படத்தை முடித்துவிட்டு தொப்பென்று படுக்கையில் விழுந்து, ‘என்ன வாழ்க்கைடா’ என அரைமணிநேரம், இன்று தீர்வுகாண இயலாத பிரச்சனைகளை நாளை எப்படி முடிப்பது என அரைமணிநேரம் என ஒதுக்கி புரண்டுகொண்டு இருப்பேன்...
பிறகு நான் எப்பொழுது தூங்குவேன், எனக்கே தெரியவில்லை. அடித்துப்போட்ட மாதிரி கிட்டத்தட்ட 6 மணிநேர சுகமான தூக்கம். ஹன்சிகா, காஜல்-னு குஷியா இருந்திருக்கும்னு நினைத்துவிட வேண்டாம். முக்கால்வாசி எனக்கு கல்விக்கடன் கொடுத்த வங்கி மேலாளர் தான் வருவார், மீதியுள்ள கால்வாசியில் எகிறிக்கொண்டு போகும் விலைவாசியும், எங்கேயோ இருந்து வரும் என தாய் தந்தை ஆசியும் வரும்...
பி.கு.: ரொம்ப நாள் ஆச்சே வலைப்பூ பக்கம் வந்து, எதைப்பற்றி எழுதலாம் என்று சிந்திக்கையில் ஒரு நாள் எனக்கு (அனேக ஆட்களுக்கு) எப்படி கழிகிறது என்று எழுதினால்தான் என்னவென்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு. இந்த உலகத்தில் அக்கறையே இல்லாமல் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி “எப்படி இருக்கீங்க?”. அதுக்கு எங்க ஊர்ல ‘ஏதோ வண்டி ஓடுது’னு தமாஷா சொல்லுவாங்க. இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன் ஏன் இந்த தலைப்பென்று!

Comments
Post a Comment