புலியா? பெண்ணா?


எல்லாருக்கும் வணக்கம். பதிவுக்காக காத்திருந்த உள்ளங்களுக்கு நன்றி. ஒரு அழகிய கதையை (அல்லது குழப்பம் என்று கூட சொல்லலாம்) உங்களிடம் இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சத்தியமாக என் கதை அல்ல, சுட்ட கதை தான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் “Frank Stockton” என்கிற சிறுகதை எழுத்தாளர் எழுதிய ‘The Lady, or the Tiger?’ என்கிற ஒரே ஒரு கதை இன்னும் பேசப்படுகிறது. ஸ்டாக்டன் இந்தக் கதையை 1882-ல் எழுதினார். நூற்றுமுப்பது (130) வருஷம் கழித்துக்கூட இதன் முடிவை விவாதிப்பவர்கள் இருக்கிறார்கள். கதை என்ன என்று சொல்கிறேன்.
 
ரொம்ப நாள் முன்னால் ஒரு ராஜா இருந்தான். அவனுடைய தலைநகரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தில்தான் பொதுஜனக் கேளிக்கைகளும் தண்டனைகளும் நடக்கும். எல்லாரும் பார்த்து மகிழ்வார்கள். ராஜாவின் கவனத்தைக் கவரும் வகையில் ஒரு குற்றம் நிகழ்ந்துவிட்டால், குற்றவாளியை ஸ்டேடியம் நடுவில் கொண்டுவந்துவிடுவார்கள். எல்லாருக்கும் தகவல் சொல்லி ஜனங்கள் சூழ்ந்திருக்க, குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்படும். தண்டனை என்ன?
 
ராஜா சைகை காட்ட, குற்றவாளிக்கு எதிரே அருகருகே இரண்டு கதவுகள் இருக்கும். இரண்டும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டவை. அதில் ஒன்றைக் குற்றவாளி தன் இச்சைப்படி தேர்ந்தெடுத்துத் திறக்க வேண்டும். ஒரு கதவைத் திறந்தால், அதன் உள்ளிருக்கும் பசித்த புலி வெளிவந்து அவன் மேல் பாய்ந்து குத்திக் குதறித் தின்றுவிடும். மற்றொரு கதவைத் திறந்தால், அவன் வயசுக்கும் தகுதிக்கும் ஏற்ப ஒரு பெண் – ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான பெண் – காத்திருப்பாள். அவளைக் குற்றவாளி உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். ராஜா காட்டும் நியாயம் இதுதான்!
 
ராஜாவுக்கு ஓர் அழகான பெண் இருந்தாள். அவள் (எப்போதும் போல) அழகான ஏழை இளைஞனைக் காதலித்தாள். இந்தக் காதல் ராஜாவுக்குத் தெரிய வந்தது. உடனுக்குடன் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டான். தண்டனை? வழக்கம் போலத்தான்! இரண்டு கதவு – புலி அல்லது பெண். இந்த ஸ்பெஷல் கேஸுக்காக ராஜா பிரத்யேகமாக ஒரு புலியைத் தயார் செய்தான் – கோபம் அதிகமான, பசி அதிகமான புலி. அதே போல் பெண் விஷயத்திலும் பேட்டையிலேயே பெரிய அழகியைத் தேர்ந்தெடுத்தான் ராஜா. அதில் எல்லாம் பாரபட்சம் இல்லாதவன் போல.


தண்டனை நாள் வந்தது. காதலன் கொண்டுவரப்பட்டு நடுவே விடுவிக்கப்பட்டான். இரண்டு கதவில் ஒன்றைத் திறப்பதற்கு முன் ராஜாவுக்குத் தலைவணங்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்த ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்தான். ராஜகுமாரிக்கு மட்டும் எந்தக் கதவுக்குப் பின்னால் புலி, எதில் பெண் என்பது முன்பே தெரிந்திருந்தது. ஒரு பெண்ணின் வைராக்கியமும், காவலர்களின் பொன் ஆசையும் அவளுக்கு அந்தத் தகவலைக் கொடுத்திருந்தன. ராஜகுமாரியைப் பரிதாபத்துடன் பார்த்த காதலன் கண்ணாலேயே ‘எந்தக் கதவு?’ என்று கேட்டான். அதற்கு அவள் உடனே வலது கையைச் சற்றே உயர்த்தி வலது பக்கக் கதவைக் காட்டினாள். அது அவள் காதலனுக்கு மட்டும்தான் தெரிந்தது.
 
காதலன் உடனே விருவிருவென்று நடந்துபோய் எதிரே வலது பக்கக் கதவைத் தயக்கமே இல்லாமல் திறந்தான். வெளிவந்தது புலியா, பெண்ணா? புலி என்றால், தான் உயிரையே வைத்திருந்த காதலன் துடிதுடித்துச் செத்துப்போவதை எப்படி ராஜகுமாரியால் தாங்கிக்கொள்ள முடியும்? பெண் என்றால் மற்றொரு பெண்ணுடன் தன் காதலன் சுகித்து வாழ்வதை எப்படி அவளால் சகித்துக்கொள்ள முடியும்?
 
புலியா? பெண்ணா? நீங்கள்தான் சொல்லுங்களேன்!
 
பி.கு: எப்போதும் ‘பஞ்ச்’ சொல்லி விடைபெறுவது பழக்கம், குழப்பத்துடன் வெளியேறுவது எனக்கே புதுமையான ஒன்றாக இருக்கிறது. நிறைய பதில்களையும் காரணங்களையும் எதிர்நோக்குகிறேன்.

Comments

  1. புலியும் பெண்ணும் ஒன்றே! எனப்புரியாதவர்களுக்கு மட்டும் தான் குழப்பம். 😂😂

    ReplyDelete

Post a Comment