கணக்கு பண்றது இப்படித்தான்


பொண்ணுங்கள கணக்கு பண்றது பத்தி இப்ப நான் பேசப்போறேன். அப்படின்னு நான் சொல்லமாட்டேன், எனக்கு அவ்ளோ கெட்டிக்காரத்தனம் எல்லாம் இல்லீங்கோ. அட்லீஸ்ட் இந்த தலைப்ப பாத்துட்டு ஒரு நாலு பேர் எக்ஸ்ட்ரா படிச்சா நல்லதுதானே. சரி விஷயத்துக்கு வர்றேன். கோழியா முட்டையா கேள்விக்கு கூட பதில் கண்டுபிடிச்சுடாங்க! ஆனா கடவுள் இருக்கார்னு யாரும் நிரூபிக்கல, இல்லைன்னும் நிரூபிக்க முடியல. இந்த நடுப்பட்ட “Agnostic” நிலையில தான் நான் இருக்கேன். நிறைய பேர் அப்படித்தான், ஆனா ஒத்துக்கமாட்டாங்க. என்னை பொறுத்தவரைக்கும் நம்ம கடமைல கரெக்டா இருந்தோம்னா கடவுள் இருந்தாலும் இல்லைனாலும் பயப்பட தேவையில்லை. ஆனா நம்ம கடமைய செய்யறோமானு யாரு நோட் பண்றாங்க? யாரு வரவு-செலவு மாதிரி பாவ-புண்ணிய கணக்கு பாக்கறாங்க?

ஒரு நண்பர்கிட்ட பேசும்போது சொன்னார்: “பால் பாயசம் நல்லா இருக்குன்னு என்னால சொல்லத்தான் முடியும். ஆனா, நீதான் அத ‘டேஸ்ட்’ பண்ணி பார்த்து உணரமுடியும். அதே மாதிரி தான் கடவுளும்.” சரி பேச்சு வழக்கு போதும். எழுத்து வழக்கிற்கு வருகிறேன். “Whatever you do, Will be noted and accounted Somewhere, And will be Rewarded for Sure !” – நாம் என்னென்ன செய்கிறோமோ நிச்சயம் அது எங்கோ பதிவிடப்படும், அதற்கேற்ப பலாபலன்களும் வரும். அதற்கு அவர் ஒரு அழகான கதையும் சொன்னார். அதை உங்களிடம் பகிர விரும்புகிறேன். கதை என்றவுடன் காத தூரம் ஓடுபவர்கள் சற்று கவனிக்க: “நீங்களும் இதை நிச்சயம் படிக்கவேண்டும்”.

ஒரு ஊரில் ஒரு முனிவர் வசித்துவந்தார். அவரது குடிலுக்கு அருகிலேயே ஒரு தாசியும் வசித்துவந்தாள். அந்த முனிவர் தினமும் அதிகாலை எழுந்து குளித்து சுத்தமாக பகவானுக்குரிய கைங்கர்யங்களை செய்து வந்தார். அனுதினமும் காலையில் அவர் கிணற்றடியில் இருந்து நோக்குகையில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மனிதன் அந்த தாசி வீட்டிலிருந்து வெளியேறி செல்வான். இவர் அவளை சபித்துக்கொண்டே ஒரு கூழாங்கல்லை எடுத்து ஒரு ஓரத்தில் வைப்பார். நாட்கள் நகர நகர அந்த கூழாங்கற்கள் ஒரு வீடு கட்டும் அளவிற்கு குவிந்து விட்டன. ஆத்திரம் தாளாமல் அந்த முனிவர் தாசி வீட்டிற்கு சென்று அவளது செயலுக்காகவும் நடத்தைக்காகவும் கண்டபடி திட்டிவிட்டார்.


பொதுவாக அனைத்து வாதங்களுக்கும் மூன்று பக்கம் உண்டு. வாதியின் பக்கம், பிரதிவாதியின் பக்கம், உண்மையின் பக்கம். அந்த தாசியானவள் அவள் தரப்பு சோகத்தை (வாதத்தை) இவ்வாறு சொல்லி மன்னிப்பு கோரினாள்: “என்னுடைய கணவர் இறந்தபிறகு, என் குழந்தையை காப்பாற்ற எனக்கு வழி தெரியவில்லை, இப்பொழுது நான் ஒதுங்க நினைத்தாலும் இந்த சமூகம் என்னை விடுவதில்லை. வேறு வழியின்றி ஒவ்வொரு முறை புணரும்போதும் ‘கிருஷ்ணா உனக்கு சமர்ப்பணம்’ என்றுதான் ஈடுபடுகிறேன் முனிவரே, என்னை மன்னியுங்கள் !”. முனிவருக்கு மேலும் கோபம் அதிகரித்தது, “உன்னுடைய இழிசெயலுக்கு பகவான் நாமத்தை ஏன் பயன்படுத்துகிறாய், இந்த ஊரிலிருந்து ஒழிந்து சென்றுவிடு” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அவளும் வேறு வழியின்றி வேறெங்கோ போய்விட்டாள்.

வருடங்கள் உருள இருவரும் ஒரு கட்டத்தில் இறந்துவிட்டனர். அவர்களது ஆன்மா பரலோகம் சென்றது. எமதர்மாராஜா முனிவரை நரகத்துக்கும், தாசியை சொர்க்கத்துக்கும் ‘பார்சல்’ செய்ய சொல்லிவிட்டார். முனிவர் பகவானிடம் இறுதியாக உரையாட விரும்பினார். “எனக்கு ஏன் இந்த அநீதி பெருமானே? உன்னை தொழுவதே என் கடமையாக கொண்டிருந்தேன், நான் என்ன தவறிழைத்தேன்?” என குமுறினார். பகவான் சொன்ன பதில் முனிவரை உண்மையை உணரவைத்தது. எனக்கும் சில விஷயங்களை உணரவைத்தது.


கடவுள் அந்த முனிவருக்கு கீழ் உலகத்தில் நடப்பதை காண்பித்தார். முனிவரது உடல் வாசனை திரவியங்களால் சுத்திகரிக்கப்பட்டு, சந்தன கட்டைகளால் சகல மரியாதையுடன் எரியூட்டப்பட்டது. தாசியின் உடலோ சீண்ட ஆளில்லாமல் நாய்களுக்கும், எலிகளுக்கும், கழுகுகளுக்கும் இரையானது. இக்காட்சியைக் கண்ட முனிவரை நோக்கி கடவுள் கூறினார்: “உன் கடமை என்னை தொழுவது என்று நீ சொல்கிறாய். ஆனால் உனக்கு பிறர் மனையை நோக்குவதும், கூழாங்கற்கள் குவிப்பதுமே வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு முறை நீ தொழும்போது உன் உதடுகள் மட்டுமே என்னை உச்சரித்தன. ஆனால் உன் உள்ளம் அந்த தாசி வீட்டிற்கு வருவோர் போவோரை கணக்கெடுப்பு செய்வதிலேயே இருந்தது. ஆனால் அந்த தாசி ஒவ்வொரு முறை தவறிழைக்கும்போதும் என்னிடமே சரணடைந்தாள், உள்ளத்தை எனக்கே சமர்ப்பணம் செய்தாள். அவளது உடல் மட்டுமே தவறு செய்தது”.

“உன் உடல் செய்த புண்ணியங்களுக்கு உன் உடல் பலன்களை பெற்றுவிட்டது, உன் ஆன்மாவின் கறைகளுக்கு நரகத்தில் பலன்கள் காத்திருக்கின்றன. அந்த தாசியின் உடல் செய்த தீங்கிற்கு அந்த உடல் பலனை அனுபவித்துவிட்டது. அவளது ஆன்மா இப்பொழுது சொர்க்கம் செல்கிறது”.

நமக்கு இறை நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ, ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு செயலை செய்யும் முன்னர் இந்த கதையை நினைத்துப்பார்க்க வேண்டும். “கிருஷ்ணா உனக்கு சமர்ப்பணம்” என்று சொல்லிவிட்டு ஜாலியாக கொலை செய்யலாம், கஞ்சா அடிக்கலாம் என்று நான் சொல்லவில்லை. விஞ்ஞான முறையில் சொல்லப்போனால், எப்படி நிச்சயம் ஒரு விசைக்கு எதிர்விசை உண்டோ, அதேபோல் ஒரு செயலுக்கு அதன் பிரதிபலன் நிச்சயம் உண்டு.

பின்குறிப்போ, தத்துவமோ தந்து மீண்டும் மொக்கை போட விரும்பவில்லை. உங்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப நீங்களே நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!

“Look before you leap; Think before you Act!”

Comments