சரியாய் 6 மாதம் ஆயிற்று வலைப்பூ பக்கம் வந்து. "அதுக்கு முன்னாடி மட்டும் டெய்லி 7 போஸ்ட் போட்டியா?"னு கேட்கக்கூடாது; நாட்டு நிலைமை அப்படி! எனக்கு நானே ஆபீஸ்ல டைட், MBA-ல வெயிட்-னு சொல்லிக்கொண்டு இருந்தேன். பிறகு சிலபல நண்பர்கள்தான் எனக்கு என் வலைப்பூ பெயரையே நினைவூட்டினார்கள். எதைப்பற்றி எழுதலாம் என யோசித்து எழுதுவது எழுத்தாளர் பணி. நான் சாமானியன், போகிறபோக்கில் வார்த்தைகளை அள்ளித்தூவுவது தான் நான்.
இரவு 10 மணி அளவில் அலுவலகம் செல்கையில் (ஆம் இரவு தான்) ஓரிரு சிக்னல்களை என் Uber டாக்ஸி தப்பித்துவிட, MG சாலையில் மிகச்சரியாக மாட்டியது. மஹாத்மா காந்தி சாலை என சொல்லவேண்டும் என்று எனக்கும் ஆசைதான், இரவில் அங்கு இருக்கும் Pub கலாச்சாரம், MG என்று சொல்வது மேல் என்று நினைவூட்டுகிறது. என் டாக்ஸி முன்னே இரு பெண்கள்(!) தள்ளாடியபடி ஓட்டுனரிடம் சண்டையிட முயன்றனர், அவர்கள் புக் செய்த டாக்ஸி வரவில்லையாம், அதனால் நான் இறங்கி அவர்களை அனுப்பிவைக்க வேண்டுமாம். "என்ன கொடுமை சரவணன்?" என்று நினைத்துக்கொண்டே இறங்கி நடந்துவிடலாம் என எத்தனித்தேன். "சொல்பா இரி குரு" என்று டிரைவர் சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கி சிலபல நன்மொழிகள் பேசி அவர்களை ஒரு ஆட்டோவின் அருகே கொண்டுவிட்டார்.
எங்கிருந்துதான் இவர்களுக்கு பணம் வருகிறது என்று புரியவில்லை. ஒரு படத்திற்கு சென்றால் டிக்கெட் 120 ரூபாய், ஆறிப்போன பாப்கார்ன் 150 ரூபாய். அந்த செலவை ஈடுகட்ட ஒரு வாரம் முழுவதும் மசால் தோசை, புலாவ் என்று சாப்பிடாமல் இட்லி-வடையோடு முடித்துக்கொள்ளும் ரகம் நான். அவர் தினமும் இந்த காட்சிகளை பார்ப்பது பற்றி வழிநெடுக சொல்லிக்கொண்டு வந்தார். கன்னடம் புரிந்த காரணத்தினால் சொன்னதை உள்வாங்கிக்கொண்டேன்.
ஒவ்வொரு சிக்னலில் ஒவ்வொரு வித மனிதர்கள். சிலர் Facebook, Twitter அப்டேட்ஸ் செய்கிறார்கள், ஒருசிலர் பிளாஸ்கில் விற்கும் டீ/காபி அருந்தினார்கள், மயிற்பீலி வியாபாரம் ஒருபுறம், கார் துடைக்கும் பிரஷ் ஒருபுறம், விவேக் காமெடி பாணியில் இட்லி மட்டும் தான் விற்கவில்லை. சுமார் மூன்று நிமிடங்கள் நிற்கும் சிக்னலில் உலக தத்துவத்தை பாதி புரிந்துகொண்டேன்.
நண்பர்கள் எனக்கு மிகக்குறைவு, அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதைவிட குறைவு. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஆசை, ஆனால் நேரத்தை சம்பாதிக்க தெரியவில்லை. பணத்தை சம்பாதிக்க தான் படிப்பு உதவுகிறது. அடுத்த வினாடி ஒளிந்திருக்கும் ஆச்சரியம் இந்த உலகில் ஏராளம். அந்த ஆச்சரியம் இன்று நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் தினமும் வாழ்க்கையை தொடங்குகிறேன்.
வாழ்க்கையைப் பற்றி யோசிக்க அந்த ரெட் லைட் ஏரியா தான் சந்தர்ப்பம் அளிக்கிறது, பச்சை விழுந்தவுடன் அடுத்த வேளை பசிக்குமே என்ற உணர்வுதான் மேலோங்குகிறது. மீண்டும் "எந்திரன் Mode"க்கு மாறி அலுவலகம் விரைந்துவிட்டேன்.
பி.கு.: எந்த தத்துவமும் இந்த பதிவில் கிடையாது. ஒரு இடைவெளிக்குப் பிறகு கிடைத்த நேரத்தில் தோன்றியதை கொட்டிவிட்டேன். நேரத்தில் உருவாக்கக்கூடிய முயற்சிகள் இனி எனது அட்டவணையில்!
P.P.S.: This is an old blog post, shared again as is.

Comments
Post a Comment