இந்த மேற்கோள் சத்தியமாக நான் சொன்னதில்லை. தந்தை பெரியார் சொன்னது. அதில் ஏதும் பிழை இருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை...
இப்பொழுது மனிதனால் மரங்கள் வெட்டப்பட்டு, மதங்கள் வளர்க்க்கப்படும் காலகட்டத்தில் தான் நாம் வாழ்கிறோம். இறை நம்பிக்கையை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அது பிறருக்கு இடர் தருமாறு இருக்கக்கூடாது, மூடநம்பிக்கையாக இருக்கவே கூடாது. குற்றங்கள் பெருகும்போது, அதனை மன்னிக்கக் கெஞ்சி மனிதகூட்டம் கோவிலை நோக்கி படையெடுக்கும். சில கூட்டம் சாமியார்களிடம் சரணடையும். இந்த கண்மூடித்தனமான பழக்கம் என்று நீங்குமென்பது இறைவனுக்கே வெளிச்சம்...
ஒரு சின்ன கதையை பார்ப்போம். ஒரு மனிதன் கடவுளை நோக்கி கடும் தவம் இருந்து கடவுள் அவனுக்கு காட்சியும் அளித்தார். வழக்கம்போல என்ன வரம் வேண்டுமென அவர் கேட்க, பரிசுச்சீட்டில் 1 கோடி ரூபாய் வரவேண்டுமென்று தன் வரத்தை அவன் கடவுளிடம் முன்வைத்தான். அப்படியே ஆகட்டும் என்று கடவுள் அவன் கேட்ட வரத்தை அளித்துவிட்டு மறைந்துவிட்டார். இவனுக்கு மகா மகிழ்ச்சி. ஊரெங்கும் சென்று 1 கோடி கிடைத்துவிட்டது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு திரிந்தான். ஏகப்பட்ட சொத்துக்களை தவணையில் வாங்கி குவித்து ஏகபோகமாக இருந்தான்.வரம் கொடுத்தவர் கடவுளாயிற்றே, நம்பாமல் இருக்க முடியுமா என்ன? சில நாட்கள் சென்றன. பரிசுச்சீட்டு முடிவுகளும் வெளிவந்தன...
ஆனால் இவன் பெயர் அதில் இல்லவேயில்லை. நாளிதழை நாலாபுறங்களிலும் திருப்பித்திருப்பி பார்த்தான், நிச்சயமாக இல்லவேயில்லை. அவன் இதயம் சுக்குநூறாய் உடைந்து போனது. அனைத்து சொத்துக்களும் இவனிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. கடன் தொல்லை வேறு மிக அதிகமாகிவிட்டது. ஊருக்குள் தலைகாட்ட முடியாமல், அவமானம் தாங்காது தற்கொலை அவன் செய்துகொண்டான்...
இறந்துபோன அவனின் ஆன்மா மேலோகம் சென்றது. அங்கே கடவுள் இருக்கும் இடத்தை தேடி சென்று அவரைக்கண்டு கேள்விகளை வீசினான். "நான் என்னயா தப்பு பண்ணேன்? நீ வரம் கொடுத்தத நம்பினேன், அது தப்பா? உனக்கு சொல் சுத்தம் இல்லையா?", என்று ஏகவசனங்கள் பேசினான். கடவுள் அவர் இருக்கையில் இருந்து இறங்கிவந்து, இவன் கன்னத்தில் 'பொளேர்' என்று ஒரு அறை விட்டார்...
"நான் வரம் அளித்தது உண்மை தான். நீ ஊருக்குள்ள சென்று தம்பட்டம் அடித்தாய், சொத்துக்களை வாங்கி குவித்தாய், ஆனால் கடைக்கு சென்று பரிசுச்சீட்டு வாங்கினாயா மடையா? நீ பரிசுச்சீட்டை வாங்கினால் தானே, என்னால் உன் பெயரை குலுக்கலில் இருந்து தேர்ந்தெடுக்க முடியும்", என்று பதிலளித்தார் கடவுள். இந்த தவறைத்தான் நம்மில் பலர் செய்துக்கொண்டு இருக்கிறோம். இருளடைந்த வீட்டில் தொலைந்த பொருளை, வெளிச்சம் இருக்கும் தெருவில் தேடினால் நிச்சயம் புலப்படாது. வெளிச்சத்தில் தான் தேடவேண்டும், ஆனால் அந்த வெளிச்சம் நம் அறியாமை இருளை நீக்கும் வெளிச்சமாக இருக்கவேண்டும்...
நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால், எந்த ஒரு செயலுக்கும் முதல் முயற்சியை, முதல் படியை நீங்கள் தான் எடுத்துவைக்க வேண்டும். அந்த மனிதன் எடுத்து வைத்த படிகள் பணத்தை நோக்கி இருந்தது, புகழை நோக்கி இருந்தது, ஆனால் பரம்பொருளை நோக்கி இல்லை. எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று எண்ணிக்கொண்டு இருப்பது, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் மூடச்செயல் ஆகும். பின்னர் அது நடக்காவிடில் கடவுள் மீது பழிபோட்டு ஒரு பயனும் இல்லை...
பி.கு.: கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள்களை நம்பலாம், இல்லை என்று சொல்பவர்களையும் நம்பலாம். ஆனால் நான் தான் கடவுள் என்று சொல்பவர்களை மட்டும் நம்பவேண்டாம். அப்புறம் 'பூட்டகேஸ்' ஆயிடுவீங்க!


இருளடைந்த வீட்டில் தொலைந்த பொருளை, வெளிச்சம் இருக்கும் தெருவில் தேடினால் நிச்சயம் புலப்படாது. அதே வீட்டில்தான் தேடவேண்டும்
ReplyDelete